பொதுக்காலம், மூன்றாம் ஞாயிறு, Fr. D.John Britto
Автор: Fr.D John Britto - Tamil
Загружено: 2026-01-24
Просмотров: 26
பொதுக்காலம் 3ஆம் வாரம் - ஞாயிறு (இறைவாக்கு ஞாயிறு) 25 01 2026
(எசா 9: 1-4; 1 கொரி 1: 10-13, 17; மத் 4: 12-23)
காரிருளும் பேரொளியும்
ஒளியைத் தந்தவன்:
சிறுவதிலேயே விபத்தில் பெற்றோரை இழந்து, அனாதையான இரண்டு சிறுவர்கள் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்தார்கள். இதில் இளையவன் விபத்தின்போது தன் இரண்டு கால்களையும் இழந்ததால், அவனால் எங்கும் போக முடியாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடந்தான். இதனால் மூத்தவனே அவனுக்கு வேண்டிய எல்லாவற்றையும் செய்து வந்தான்.
ஒருநாள் தம்பி அண்ணனிடம், “அண்ணா! நான் சூரிய ஒளியைப் பார்த்துப் பல நாள்கள் ஆகின்றன. எனக்குச் சூரிய ஒளியைக் காட்ட முடியுமா?” என்றான். ஒருசில வினாடிகள் யோசித்த அண்ணன், “சரி” என்று சொல்லிவிட்டு, சிறிது நேரத்தில் வீட்டில் இருந்த முகம் பார்க்கும் கண்ணாடியை எடுத்துக்கொண்டு வெளியே ஓடினான்.
அது நண்பகல் வேளை என்பதால், சூரியன் உச்சியில் இருந்தது. அதைத் தன்னுடைய கையில் வைத்திருந்த முகம் பார்க்கும் கண்ணாடியில் பட வைத்து, ஒவ்வொளியை வீட்டிலிருந்த சன்னல் வழியாக அனுப்பினான். அதைப் பார்த்து வீட்டிற்குள் இருந்த அவனுடைய தம்பி பெருமகிழ்ச்சி அடைந்தான். இதையெல்லாம் பார்த்துவிட்டு, அவ்வழியாய்ப் போய்க்கொண்டிருந்த பெரியவர் ஒருவர், “என்ன செய்துகொண்டிருக்கின்றாய்?” என்று அவனிடம் கேட்க, “கால்கள் இரண்டையும் இழந்து வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்ற என் தம்பி சூரிய ஒளியைப் பார்க்க வேண்டும் என்று சொன்னான். அதனால்தான் நான் அவனுக்குச் சூரிய ஒளியைக் காட்டிக் கொண்டிருக்கின்றேன்” என்று சிரித்துக் கொண்டே பதில் சொன்னான் அவன்.
ஆம், கால்களை இழந்து, வீட்டிற்குள்ளேயே அல்லது இருட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்த தன் தம்பிக்கு அவனுடைய அண்ணன் ஒளியைத் தந்தான். பொதுக் காலத்தின் மூன்றாம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக் கேட்ட இறைவார்த்தை, காரிருளில் இருந்த மக்களுக்கு ஆண்டவர் இயேசு எப்படிப் பேரொளியைத் தந்தார் அல்லது பேரொளியாய் வந்தார் என்பதை எடுத்துக்கூறுகின்றது ஆண்டவர் இயேசு பேரொளியாய் இவ்வுலகிற்கு வந்தார் எனில், அவரது ஒளியைப் பெற்றுக்கொண்டவர்களாய், நாம் எப்படி உலகிற்கு ஒளியாய் இருந்து, இருளின் ஆட்சிக்குரியவற்றை நம்மிடமிருந்து அகற்றுவது என்பது குறித்து நாம் சிந்திப்போம்.
அ. இருளில் இருக்கும் மக்கள்
ஒருசிலர் பிறவியிலேயே பார்வையற்றவர்களாய்ப் பிறந்து இருளிலேயே இருப்பதுண்டு. ஆனால், பெரும்பாலானோர் கடவுளுக்கு எதிராகவும் அவரது கட்டளைக்கெதிராகவும் பாவம் செய்து இருளிலேயே இருப்பார்கள். இஸ்ரயேல் மக்கள் கடவுளுக்கெதிராகப் பாவம் செய்து இருளில் இருந்தார்கள். இது ஒரு பக்கம் என்றால், இன்னொரு பக்கம் கொரிந்து நகரில் இருந்தவர்களும் கடவுளுக்கெதிராகப் பாவம் செய்து இருளில் இருந்தார்கள். அவர்கள் என்ன மாதிரியான பாவம் செய்தார்கள் எனில், அவர்களிடம் இருந்த பிளவும் சண்டை சச்சரவுதான்.
பெரிய குருவாம் ஆண்டவர் இயேசு, “எல்லாரும் ஒன்றாம் இருப்பார்களாக!” (யோவா 17:21) என்று கடவுளிடம் வேண்டி இருப்பார். பவுலும் கூட, ஊனியல்பின் செயல்கள் என்று, சண்டை சச்சரவையும் கட்சி மனப்பான்மையையும் குறிப்பிட்டிருப்பார் (கலா 5: 20). போலவே, “நாம் எல்லாரும் ஒரே தூய ஆவியால், ஒரே உடலாய் இருக்கும்படி திருமுழுக்குப் பெற்றோம்” (1 கொரி 12: 13) என்றும் குறிப்பிடுவார். எனில், நாம் ஒரே உடலாய், ஒரே மனத்தவராய் வாழவேண்டும் என்பதுதான் கடவுள் நம்மிடமிருந்து எதிர்பார்ப்பது. இதற்கு எதிராகச் செயல்படுவது பாவமே ஆகும்.
இந்நிலையில் கொரிந்து நகரில் இருந்த இறைமக்கள் தங்களுக்கு இறைவாக்கை அறிந்த பவுல், அப்பொல்லோ, கேபா ஆகியோரின் பெயரில் பிளவு பட்டும், சண்டை சச்சரவில் ஈடுபட்டும் பாவம் செய்தார்கள். இதை அறிந்த பவுல் அவர்களிடம், “நீங்கள் ஒத்தக் கருத்துடையவர்களாய் இருங்கள்; ஒரே மனமும் ஒரே நோக்கமும் கொண்டிருங்கள்” என்கிறார். ஆகையால், பார்வையிழக்கும் போது மட்டுமல்ல, ஒற்றுமைக்கு எதிராக நடக்கும்போதும் நாம் இருளில் இருக்கும் இருக்கின்றோம் என்பதை மறந்துவிட வேண்டாம்.
ஆ. பேரொளியாய் வந்த இயேசு
“எல்லாருமே பாவம் செய்து, கடவுள் கொடுத்த மேன்மையை இழந்து போயினர்” – இது புனித பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்தில் இடம்பெறும் வார்த்தைகள் (உரோ 3: 23). தம்மை அன்பு செய்வதற்கும் தமக்குப் பணிந்திருக்கவும் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட இஸ்ரயேல் மக்கள், அவரை அன்பு செய்யமாலும் அவருக்குப் பணிந்திருக்காமலும், வேற்று தெய்வங்களை வழிபட்டார்கள். இதனால் அவர்கள்மீது அசீரியர்களின் படையெடுப்பு நிகழ்ந்தது. இவ்வாறு இஸ்ரயேல் நாட்டின்மீது அசீரியப் படையெடுப்பு நிகழ்ந்தபோது, முதன்முதலில் பாதிக்கப்பட்ட நகர்கள் இன்றைய முதல் வாசகத்தின் தொடக்கத்தில் இடம்பெறுகின்ற செபுலோனும் நப்தலியும்தான் (2 அர 15: 29).
அசீரியப் படையெடுப்பினால் அவமதிப்புக்கு உட்படுத்தப்பட்ட செபுலோன், நப்தலி நாட்டினர் இருளில் இருந்தபோது, அவர்கள் பேரொளியைக் காண்பார்கள் என்றும், அவர்கள்மீது சுடரொளி உதித்துள்ளது என்றும் இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகம் எடுத்துக்கூறுகின்றது. இந்த இறைவார்த்தைப் பகுதி, இன்றைய நற்செய்தியில் இயேசுவின் வழியாக நிறைவேறுகின்றது. எந்த நாட்டினர் அசீரியப் படையெடுப்பினால் அவமதிப்புக்கு உட்படுத்தப்பட்டனரோ, அந்த நாட்டினரிடமிருந்து இயேசு தன்னுடைய பணியைத் தொடங்கி, அவர்கள் பேரொளியைக் காணச் செய்கின்றார்.
,
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: