திருவருகைக்காலம், நான்காம் ஞாயிறு, எசாயா Is
Автор: Fr.D John Britto - Tamil
Загружено: 2025-12-20
Просмотров: 59
இன்றைய இறைமொழி ஞாயிறு, 21 டிசம்பர் ’25
திருவருகைக்காலத்தின் நான்காம் ஞாயிறு
எசாயா 7:10-14. உரோமையர் 1:1-7. மத்தேயு 1:18-24
தூக்கத்திலிருந்து விழித்தெழுதல்
திருவருகைக்காலத்தின் நான்கு ஞாயிறு நற்செய்தி வாசகங்களும் ஒன்றோடொன்று இணைந்து நகர்கின்றன: (1) விழித்திருங்கள்! (2) தயாரியுங்கள்! (3) மகிழுங்கள்! மற்றும் (4) ஏற்றுக்கொள்ளுங்கள்!
இன்றைய வாசகங்கள் மூன்று மனிதர்களையும், அவர்களுடைய தூக்கங்களையும், அவற்றிலிருந்து அவர்கள் விழித்தெழுவதையும் நம் கண் முன் கொண்டுவருகின்றன.
கிமு 735-ஆம் ஆண்டு ஆகாசு யூதாவை ஆட்சி செய்தார். சாலமோன் அரசருக்குப் பின்னர் ஒருங்கிணைந்த இஸ்ரயேல் அரசு, வடக்கே இஸ்ரயேல், தெற்கே யூதா என்று பிரிந்தது. வடக்கே உள்ள இஸ்ரயேல் அரசு அசீரியாவின் அடிமையாக மாறி வரி செலுத்தி வந்தது (காண். 2 அர 15:19-20). இஸ்ரயேலின் அரசனான பெக்கா, சிரியாவின் அரசன் ரெஸினுடன் இணைந்து அசீரியாவை எதிர்க்கவும், அசீரியாவுக்கு எதிராக ஆகாசின் படைகளைத் திருப்பவும் திட்டமிட்டான். ஆகாசு அத்திட்டத்திற்கு உடன்பட மறுத்ததால் அவனை நீக்கிவிட்டு, தபியேலின் மகனை தாவீதின் அரியணையில் அமர வைக்க விரும்பி, ஆகாசின் மேல் படையெடுத்தான். ஏறக்குறைய எருசலேமை நெருங்கியும் விட்டான் (காண். எசா 7:1). வலுவற்ற உள்ளம் கொண்ட ஆகாசு, அச்சத்தால் நடுங்கி அசீரியப் பேரரசன் திக்லத்-பிலேசரின் உதவியை நாட முடிவெடுத்தான் (காண். 2 அர 16:7). அப்படிச் செய்வதற்கு அவன் நிறைய வரிசெலுத்த வேண்டியிருந்ததுடன், நாட்டின் சுதந்திரத்தையும் பணயம் வைக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. இப்படிப்பட்ட இக்கட்டான சூழலில் இறைவாக்குரைக்குமாறு எசாயா அனுப்பப்படுகின்றார் (முதல் வாசகம்). ஆகாசு ஆண்டவராகிய கடவுளின் துணையையோடு, தன் மக்களின் துணிவையோ நாடாமல் எதிரியின் உதவியை நாடுகிறான். ஆகாசு அரசனின் அச்சத்தைக் களையவும், அசீரியாவுடன் கூட்டுச் சேர்வதைத் தடுக்கவும் இறைவாக்கினர் எசாயா அடையாளம் ஒன்றை வழங்குகின்றார். அடையாளம் வழங்குதல் என்பது இறைவாக்குரைத்தலின் ஒரு கூறு ஆகும். ஆண்டவரைச் சார்ந்திருப்பதற்கு அஞ்சுகின்ற ஆகாசு, ‘நான் கேட்க மாட்டேன். ஆண்டவரைச் சோதிக்க மாட்டேன்’ (எசா 7:12) என்று போலியாகச் சொல்கின்றார். அவனது நம்பிக்கையின்மையைக் கடிந்துகொள்கின்றார் எசாயா: ‘மனிதரின் பொறுமையைச் சோதித்து மனம் சலிப்படையச் செய்தது போதாதோ? என் கடவுளின் பொறுமையைக்கூட சோதிக்கப் பார்க்கிறீர்களா?’ (எசா 7:13).
தொடர்ந்து எசாயா, ‘ஆண்டவர்தாமே உங்களுக்கு ஓர் அடையாளத்தை அருள்வார். இதோ, கருவுற்றிருக்கும் அந்த இளம்பெண் ஓர் ஆண் மகவைப் பெற்றெடுப்பார். அக்குழந்தைக்கு அவர், ‘இம்மானுவேல்’ என்று பெயரிடுவார்’ (எசா 7:14) என்று அடையாளம் ஒன்றை வழங்குகின்றார். இந்த அடையாளத்துக்கான விளக்கம் தெளிவாக இல்லை. கிரேக்க மொழிபெயர்ப்பிலும், மத்தேயு நற்செய்தியிலும் (1:23), ‘இளம்பெண்’ என்னும் சொல்லுக்குப் பதிலாக, ‘கன்னி’ என்னும் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. எசாயா இறைவாக்கு நூலில் ‘இளம்பெண்’ என்ற சொல் யாரைக் குறிக்கிறது? என்னும் கேள்விக்குத் தெளிவான விடை காண நம்மால் இயலவில்லை. சில விவிலிய அறிஞர்கள், இறைவாக்கினர் எசாயாவின் மனைவியைக் குறிக்கலாம் என்கின்றனர். ஓசேயா இறைவாக்கினரின் மகன்கள் அடையாளமான பெயர்களைப் பெற்றது போல, எசாயாவின் இரு மகன்களும் அடையாளமான பெயர்களைப் பெறுகின்றனர் – ‘செயார்யாசிப்’ (‘எஞ்சியோர் திரும்பி வருவர்’) (எசா 7:3), ‘மகேர் சாலால் கஸ்-பாசு’ (‘கொள்ளைப் பொருள் வேகமாக வருகின்றது. இரை விரைகின்றது’) (எசா 8:3). ‘இம்மானுவேல்’ என்பது இரண்டாவது பெயரைக் குறிக்கலாம் என்பது இவர்களின் கருத்து. இன்னும் சிலர், ‘இம்மானுவேல்’ என்னும் சொல் ஆகாசின் மகன் எசேக்கியாவைக் குறிக்கிறது என்பர். ஆனால், இந்த இறைவாக்கு உரைக்கப்படும்போது எசேக்கியாவுக்கு ஏற்கெனவே ஒன்பது வயது ஆகிறது (காண். 2 அர 16:2). எசாயாவைப் பொருத்தவரையில், ‘இம்மானுவேல்’ என்னும் சொல், ‘செயார்யாசிப்’ என்னும் சொல்லைப் போல பெரிய கருத்துருவையும் புரட்சியையும் தன்னிலே கொண்டுள்ளது. ஆகையால்தான், ‘இம்மானுவேலே, அதன் கிளைகள் உன் நாட்டின் பரப்பையெல்லாம் நிரப்பி நிற்கும்’ (எசா 8:8) என்று மீண்டும் இச்சொல்லைப் பயன்படுத்துகின்றார்.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: