திருஅதிகை வீரட்டானம் - வெண்ணிலா மதியம் தன்னை - திருநாவுக்கரசர் தேவாரம்
Автор: Thiruneriya Thamizhosai
Загружено: 2025-11-25
Просмотров: 287
04.025 திருஅதிகை வீரட்டானம் | வெண்ணிலா மதியம் தன்னை | திருநாவுக்கரசர் தேவாரம் | @ThiruneriyaThamizhosai
Sri Veerattaneswarar Temple | Thiruvathigai | Thirunavukarasar Thevaram | Thevaram Padal Pettra Sthalam | Thiruneriya Thamizhosai
சிவபெருமானின் வீரம் வெளிப்பட்ட எட்டு தலங்களில் முக்கியமான தலம் திருவதிகை. அட்ட வீரட்டானத் தலங்களில் ஒன்றாகத் திகழும் திருவதிகையில் தான் சிவபெருமான் திரிபுர சம்ஹாரம் செய்தார்.
திருநாவக்கரசர் உழவாரப்பணி செய்த இத்தலத்தை மிதிக்க அஞ்சி சுந்தரர் அருகிலிருந்த சித்தவடமடத்தில் தங்கி இத்தலப் பெருமானை வழிபட்டார். சுந்தரர் இரவு மடத்தில் தூங்கிக் கொண்டு இருந்த போது அவரின் மேல் யாரோ காலால் இடிப்பது தெரிந்து சுந்தரர் நகர்ந்து படுத்தார். மீண்டும் யாரோ அவர் தலையில் கால் படும்படி படுக்க, சுந்தரர் எழுந்து காலால் தலையை தீண்டியவரை கடுமையாகப் பேச, பின் இறைவன் தான் இவ்வாறு திருவிளையாடல் செய்துள்ளார் என்பதைப் புரிந்து கொண்டு அவரை வணங்கினார். இவ்வாறு சுந்தரர் இறைவனிடம் திருவடி தீட்சை பெற்றதும், பல்லவனான மகேந்திர வர்மனின் மனத்தை மாற்றிச் சமண் பள்ளிகளை இடித்துக் குணபரவீச்சரம் என்ற கோவிலை எழுப்பச் செய்ததும் இத்தலத்தின் பெருமையைப் பறைசாற்றும் நிகழ்ச்சிகளாம்.
இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ வீரட்டேஸ்வரர்
இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ திரிபுரசுந்தரி
திருமுறை : நான்காம் திருமுறை 025 வது திருப்பதிகம்
அருளிச்செய்தவர் : திருநாவுக்கரசு சுவாமிகள்
பதிக குரலிசை : திரு மதுரை முத்துக்குமரன் ஓதுவார்
திருவதிகை வீரட்டானத்தமுதைத் தொழுது பணிசெய்து கொண்டிருந்த காலத்திற் பாடியருளிய செந்தமிழ்ப் பாட்டுக்களுள் ஒன்று இத்திருப்பதிகம்.
00:12 வெண்ணிலா மதியம் தன்னை விரிசடை மேவ வைத்து
உண்ணிலாப் புகுந்து நின்று அங்கு உணர்வினுக்கு உணரக் கூறி
விண்ணிலார் மீயச்சூரார் வேண்டுவார் வேண்டுவார்க்கே
அண்ணியார் பெரிதும் சேயார் அதிகை வீரட்டனாரே. ..... (01)
01:13 பாடினார் மறைகள் நான்கும் பாயிருள் புகுந்து என் உள்ளம்
கூடினார் கூடல் ஆலவாயிலார் நல்ல கொன்றை
சூடினார் சூடல் மேவிச் சூழ்சுடர் சுடலை வெண்ணீறு
ஆடினார் ஆடல் மேவி அதிகை வீரட்டனாரே. ..... (02)
02:31 ஊனையே கழிக்க வேண்டில் உணர்மின்கள் உள்ளத்துள்ளே
தேனைய மலர்கள் கொண்டு சிந்தையுள் சிந்திக்கின்ற
ஏனைய பலவுமாகி இமையவர் ஏத்த நின்று
ஆனையின் உரிவை போர்த்தார் அதிகை வீரட்டனாரே. ..... (03)
03:56 துருத்தியாங் குரம்பை தன்னில் தொண்ணூற்று அங்கு அறுவர் நின்று
விருத்தி தான் தருக என்று வேதனை பலவும் செய்ய
வருத்தியால் வல்லவாறு வந்து வந்து அடைய நின்ற
அருத்தியார்க்கு அன்பர் போலும் அதிகை வீரட்டனாரே. ..... (04)
05:06 பத்தியால் ஏத்தி நின்று பணிபவர் நெஞ்சத்து உள்ளார்
துத்தி ஐந்தலைய நாகம் சூழ்சடை முடிமேல் வைத்து
உத்தர மலையர் பாவை உமையவள் நடுங்க அன்று
அத்தியின் உரிவை போர்த்தார் அதிகை வீரட்டனாரே. ..... (05)
06:26 வரிமுரி பாடி என்றும் வல்லவாறு அடைந்தும் நெஞ்சே
கரியுரி மூடவல்ல கடவுளைக் காலத்தாலே
சுரிபுரி விரிகுழலாள் துடியிடைப் பரவை அல்குல்
அரிவையோர் பாகர் போலும் அதிகை வீரட்டனாரே. ..... (06)
07:16 நீதியால் நினைசெய் நெஞ்சே நிமலனை நித்தமாகப்
பாதியாம் உமை தன்னோடும் பாகமாய் நின்ற எந்தை
சோதியாய்ச் சுடர் விளக்காய்ச் சுண்ண வெண்ணீறு அது ஆடி
ஆதியும் ஈறும் ஆனார் அதிகை வீரட்டனாரே. ..... (07)
08:42 எல்லியும் பகலும் எல்லாம் துஞ்சுவேற்கு ஒருவர் வந்து
புல்லிய மனத்துக் கோயில் புக்கனர் காமன் என்னும்
வில்லி ஐங்கணையினானை வெந்துக நோக்கியிட்டார்
அல்லியம் பழன வேலி அதிகை வீரட்டனாரே. ..... (08)
09:18 ஒன்றவே உணர்திராகில் ஓங்காரத்து ஒருவனாகும்
வென்ற ஐம்புலன்கள் தம்மை விலக்குதற்கு உரியீர் எல்லாம்
நன்றவ நாரணனும் நான்முகன் நாடிக் காண்குற்று
அன்று அவர்க்கு அரியர் போலும் அதிகை வீரட்டனாரே. ..... (09)
10:02 தடக்கையால் எடுத்து வைத்துத் தடவரை குலுங்க ஆர்த்துக்
கிடக்கையால் இடர்கள் ஓங்கக் கிளர்மணி முடிகள் சாய
முடக்கினார் திருவிரல் தான் முருகமர் கோதை பாகத்து
அடக்கினார் என்னை ஆளும் அதிகை வீரட்டனாரே. ..... (10)
பொருளுரை : என்னை அடியவனாக்கிக் கொண்ட அதிகை வீரட்டனார், பெரிய கயிலை மலை நடுங்குமாறு ஆரவாரித்து நீண்ட கைகளால் பெயர்க்க முயன்ற இராவணன் அதன் கீழகப்பட்டுத் துன்பங்கள் மிகுந்து விளக்கமான மண மணிமுடிகள் நசுங்கி அவலமுறுமாறு தம் திருவடிப் பெருவிரலைச் சற்றே வளைத்து ஊன்றினார். அவரே நறுமணம் கமழும் மாலையை அணிந்த பார்வதியை இடப்பாகமாக அடக்கியவரும் ஆவார்.
ஆலய முகவரி : அருள்மிகு அதிகை வீரட்டேஸ்வரர் திருக்கோவில், திருவதிகை, பண்ருட்டி அஞ்சல், கடலூர் மாவட்டம், PIN - 607 106.
குறிப்பு : இப்பதிகத்திற்கான சொற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம்.
"மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகம் எல்லாம்"
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: