சுயகல்வியைத் தேடி | பனைமீட்பர் காட்சன் சாமுவேல் | தன்னனுபவப் பகிர்தல்
Автор: Cuckoo Movement for Children
Загружено: 2023-09-04
Просмотров: 1406
இந்தியச்சூழலில் காட்சன் சாமுவேல் அவர்களின் பனைசார் பங்களிப்பு என்பது மிக முக்கியமானது. ஓர் அருட்தந்தையாகத் தனது வாழ்வை செலுத்திக்கொண்டு, ஒவ்வொரு சிறுவாய்ப்பிலும் பனைமரத்தை இறைக்குறியீடாக எல்லா மக்களிடத்தும் பதிவுசெய்கிறார். பனைத்தூதுவன் போல இத்தேசமெங்கும் அச்செய்தியை சுமந்தலைகிறார். 28 வருடங்களுக்கு முன்பு அவர் தொடங்கிய இப்பயணம்தான், சமகாலத்தில் இங்கு நிகழும் அனைத்து பனைசார்ந்த முன்னெடுப்புகளுக்குமான செயற்தொடக்கம். விதைத்து நெடுங்காலந்தள்ளி பயன்தரும் பனைமரம் போல அவரின் வாழ்வும் பயணமும் எதிர்காலத் தலைமுறைகளுக்கான நிகழ்கால முற்றளித்தல் எனலாம்.
போதகர் காட்சன் சாமுவேல் அவர்கள் தன்னுடைய வாழ்வுக்கதை குறித்தும், பனைமீட்புப் பயணங்கள் குறித்தும் அகம்திறந்து உரையாடும் தன்னனுபவப் பகிர்தலே இக்காணொளி. எல்லா காலத்துக்குமான கருப்பொருளை வாழ்விலேந்தி களப்பணியாற்றும் முன்னோடி ஆசிரியர்களைத் தேடிக்கண்டடைந்து ஆவணப்படுத்தும் 'சுயகல்வியைத் தேடி' முன்னெடுப்பில் இதை வெளியிடுவதில் நிறைமகிழ்வு அடைகிறோம். நல்லதிர்வுடன் இதை ஆவணப்படுத்திய தோழமைகள் பராதி கோபால், வினோத் பாலுச்சாமி, அய்யலு குமரன், மோகன் தனிஷ்க், அங்கமுத்து ஆகியோரின் கூட்டுழைப்பு இக்கனவை தொடர்ந்து நிறைவேற்றிவருகிறது.
இளையவர்களுக்கும் குழந்தைகளுக்கும் நிச்சயம் இவருடைய குரலை மனதில் பதியவையுங்கள். காரணம், எப்படியாவது நாம் காப்பாற்ற வேண்டிய 'சூழலிய அறம்' இக்குரலில் பனைச்சோறுபோல உட்பொதிந்துள்ளது. ஆசிரியர்களும் பெற்றோர்களும் அவசியம் இந்த உரையாடலை தங்களது சூழ்நிலை வளையத்திலுள்ள அனைத்துக் குழந்தைகளுக்கும் பரப்புங்கள். பனை எனும் மரம் ஓர் அறக்குறியீடாக நம் மரபில் எஞ்சுவதற்கு இக்காணொளி காட்சித்துணையாக அமையும்.
தமிழிலக்கியமான நீதிவெண்பா 'தேர்ந்து ஈயும் இடத்து ஓங்கு பனை' என்கிறது. ஈகையினால் உயர்ந்து நிற்கும் மரம் பனை. பனையை வாழ்வாகக்கொண்டு உயிர்த்துவரும் எத்தனையோ உயிர்களுக்கான உறுதுணைக்குரலாக ஒலிக்கிறது காட்சன் சாமுவேல் அவர்களின் ஒவ்வொரு வார்த்தையும். இந்நிலத்தின் வாழ்வுச்சூழலோடு ஒன்றாகிப்போன இறைமரத்தின் அருள்பரப்பும் இப்பனைத்தூதரின் வாக்கு பல்கிநிறைக!
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: